சண்டிகருக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் பிரச்னைகளை களைய மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பான மாநாட்டை அமைச்சா் அமித் ஷா தொடங்கிய போது, அவர் முன்னிலையில் காணொலி வாயிலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 30,000 கிலோ போதைப்பொருள்கள் மற்றும் போலி மருந்துகள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “ 2014-ம் ஆண்டில் மோடி பிரதமரான போது, இந்திய அரசு போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை ஏற்றுக்கொண்டது. போதைப்பொருள்கள் இளம் தலைமுறையினரை மோசமாக பாதிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல் மூலமாக ஈட்டப்படும் பணமானது நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப்பில் போதைப்பொருள் கடத்தல் பிரச்னை அதிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக மாநில அரசுடன் இணைந்து செயல்பட பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராக உள்ளது.
பஞ்சாப்பில் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் பிரிவு அமைக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசால் மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. மத்திய அரசுடன் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.