44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடந்துவருகிறது. மூன்றாம் நாளான இன்றும், இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் வீரர்களின் பெயர்களைப் படித்ததில் கண்ணில் பட்டது லயா சுவாமிநாதன் என்கிற பெயர். கேமேன் தீவுகள் சார்பாக ஓப்பன் பிரிவில் விளையாடும் லயா சுவாமிநாதனுக்கு இன்று ஓய்வு நாள். அவரிடம் பேசியதிலிருந்து…
எத்தனை வருஷம் இந்தியாவுல இருந்திருக்கீங்க?
“பிறந்ததுல அஞ்சு வயசு வரைக்கும் இந்தியாதான். அதுக்கு அப்புறம் குடும்பத்தோட ஸ்பெயின் போயிட்டோம். அப்புறம் கடந்த சில வருஷமா கேமேன் தீவுகள்ல இருக்கோம். எங்க வீட்டுல இப்பவும் தமிழ் பேசுவாங்க. என்னால புரிஞ்சுக்க மட்டும் முடியும்.”
இந்தத் தொடர் எப்படி இருக்கிறது?
“முதல் ரெண்டு நாளும் கஷ்டமாத்தான் இருந்துச்சு. முதல் போட்டி கொஞ்சம் டஃப் கொடுக்க முடிஞ்சது. ஓப்பன்ல ஆடறதுல இருக்குற நன்மை நிறையப் பெரிய பிளேயர்ஸோட விளையாட முடியும். என்ன, ஜெயிக்கறது கஷ்டமா இருக்கும்.”
நீங்க ஏன் பெண்கள் அணியில விளையாடல?
“எங்க நாட்டுல பெண்கள் அணியில விளையாடற அளவுக்கு எல்லாம் போட்டியாளர்கள் இல்லை. அதனால, ஓப்பன் அணியில விளையாடுறேன். சீக்கிரமே எங்க நாட்டுல நிறையப் பேர் விளையாட வருவாங்கன்னு நம்பறேன்.”
விருந்தோம்பல் எல்லாம் எப்படி இருக்கு?
“சில நாடுகளுக்கு விளையாடப் போயிருக்கேன். ஆனா இங்க அளவுக்கு எங்கேயுமே இருந்ததில்ல. இங்க எந்த விஷயத்துக்கு எல்லாம் நாங்க செலவு பண்ணினோம்ன்னு யோசிக்கவே முடியல. கால் டாக்ஸில சில இடங்களுக்கு நாங்களே போனோம். அதுக்கு மட்டும்தான் செலவு பண்ணினோம். மத்தபடி, தங்கற இடம், உணவுன்னு எல்லா விஷயத்துலயும் ரொம்பவே நல்லா கவனிச்சுக்கிறாங்க. தமிழக அரசுக்கு மிகப்பெரிய நன்றி!”