லோகேஷ் கனகராஜுடன் போட்டி போட ஆசைப்படும் பாரதிராஜா

16 வயதினிலே படம் தொடங்கி கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிராஜா, சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருவதோடு, அவ்வப்போது இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார். இந்த நிலையில் சென்னை வடபழனியில் தமிழ் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய பாரதிராஜா, தமிழகம் தொடங்கி டில்லி வரை பல மேடைகளை பார்த்து உள்ளேன். ஆனால் பத்திரிகையாளர்கள் நடத்தும் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக உள்ளது. முன்பு ஒரு பத்திரிகையாளர் என்னை குறைத்து மதிப்பிட்டு செய்தி எழுதியபோது அந்த பத்திரிகை ஆசிரியரை நேரில் சென்று திட்டினேன். இப்போது நான்காவது தலைமுறை ஊடகத்தினரை பார்க்கிறேன். இந்த ஊடகச் சூழல் மிகவும் நட்பாக மாறியிருக்கிறது என்று கூறிய பாரதிராஜா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து கண்டிப்பாக பேச வேண்டும். சின்ன பையன்தான் ஆனால் சாதனைகளில் ரொம்ப பெரிய பையன். சினிமாவை நேசித்து பெரிய கனவுடன் வந்துள்ளார்.

எனக்கு இந்த லோகேஷ் கனகராஜ் ரொம்ப பிடித்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர், சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ரஜினி, கமலை இணைத்து மதுரையில் ஒரு விழா நடத்த வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் 16 வயதினிலே படத்தை இயக்கியபோது நானும், ரஜினியும் ஓட்டல் வராண்டாவில் படுத்து தூங்கினோம். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நடிகர்தான் ரஜினி என்று பேசிய பாரதிராஜா, இப்போது நான் இரண்டு படங்களை இயக்கி வருகிறேன். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டும் அளவிற்கு அவருடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும். அவர் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது என்று பேசினார் இயக்குனர் பாரதிராஜா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.