ஓமலூர் அருகே கோவிலுக்கு சென்ற சென்ற மூதாட்டி நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி மந்திவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள்(78 வயது) தனது வீட்டருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதையடுத்து சின்னம்மாளின் பேரன் விஜயகுமார், கோவில் அருகே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மின் மோட்டார் அறையில், எலக்ட்ரிக் ஒயரால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், சின்னம்மாள் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த நகைகள் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் தங்க வளையல் என மொத்தம் 13 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார், தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்து சென்ற மர்ம நபர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த சின்னம்மாளின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூதாட்டி சின்னம்மாளை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஓமலூர் அருகே கோவிலுக்கு சென்ற மூதாட்டியை நகைக்காக கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM