மும்பை: பாடகர் மீதான அச்சுறுத்தல் புகார் தொடர்பாக தனது சகோதரியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கங்கனா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா, பிரபல திரைப்பட பாடகர் ஜாவேத் அக்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாவேத் அக்தர், கங்கனாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல் கங்கனா தரப்பில், ஜாவேத் அக்தருக்கு எதிராக அச்சுறுத்தல், மிரட்டல் வழக்கு தொடுத்திருந்தார். அதில், ஜாவேத் அக்தர், தன்னையும் எனது சகோதரி ரங்கோலியையும் தனது வீட்டிற்கு உள்நோக்கத்துடன் அழைத்தார்; பின்னர் எங்களை அச்சுறுத்தினார். அதனால் அவர் என்னிடமும், சகோதரியிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட இரு வழக்குகளும் மும்பையின் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கங்கனா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘இந்த வழக்கில் எனது சகோதரி ரங்கோலி சாண்டலின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்‘ என்று கூறியுள்ளார். அதையடுத்து இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கடந்த மாதம் மேற்கண்ட நீதிமன்றத்தில் கங்கனா ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.