பெங்களூரு : விவசாயிகள், பொது மக்களுக்கு இடையே பாலமாக செயல்பட்ட ஹாப்காம்சில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், ஊழியர்களை நியமிக்க தயாராகி வருகிறது.ஹாப்காம்ஸ் எனும் தோட்டக்கலைத்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மார்க்கெட் மற்றும் பதப்படுத்தும் சொசைட்டி, விவசாயிகள், பொது மக்கள் இடையே பாலமாக செயல்படுகிறது.ஆரம்பத்தில் 900 க்கும் மேற்பட்ட, நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். 10 ஆண்டுகளாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது 500 பேர் மட்டும் பணியாற்றுகின்றனர்.
இதில் அடுத்த ஆண்டு 150 க்கும் அதிகமானோர் ஓய்வு பெறவுள்ளனர். ஊழியர்களை நியமிக்காவிட்டால் பாதிப்பு ஏற்படும். 1965ல் ஆரம்பமான ஹாப்காம்ஸ், பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், ராம்நகர், துமகூரு மாவட்டங்களில் 250 க்கும் மேற்பட்ட கடைகள் வைத்துள்ளது.இந்த கடைகள் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, உதவியாக உள்ளன. ஹாப்காம்ஸ் கடைகளை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேவை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், கடைகளை நிர்வகிக்க முடியவில்லை என, அதிகாரிகள் இயலாமை தெரிவித்துள்ளனர்.ஹாப்காம்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:துவக்கத்தில் தேவைக்கும் அதிகமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சில எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சிபாரிசு செய்வோர், தினக்கூலி ஊழியர்களாக சேர்க்கப்பட்ட பின், நிரந்தரமாக்கப்பட்டனர். இவர்களும் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஆனால் ஹாப்காம்சில் பணமில்லை. ஓய்வு சலுகைகளை வழங்க முடியவில்லை. இதனால் சில ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விவசாயிகளிடம் வாங்கிய உற்பத்தி பொருட்களுக்கு, 10 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அரசு மருத்துவமனைகள், மாணவர் விடுதிகளுக்கு வினியோகிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களுக்கு, அரசிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது.ஒப்பந்த அடிப்படையில், ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement