பாட்னா: பாட்னா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தான் படித்த பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த அகில இந்திய மாணவர் சங்கத்தினர், ‘தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்; பாட்னா பல்கலைக்கழகத்திற்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். அப்போது சில மாணவர்கள் ‘ஜேபி நட்டா கோ பேக்’ (ஜேபி நட்டாவே திரும்பி போ) என்ற கோஷத்தை எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தள்ளிவிட்டு, ஜேபி நட்டாவை அழைத்து செல்ல முயன்றனர். சில மாணவர்கள் நட்டாவின் கார் முன் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தில் கூட்டணி அரசு இருந்தும் பாஜக தேசிய தலைவருக்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு வழங்கவில்லை என்று மாநில பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்கனவே பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாட்னா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் அதை நிராகரித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.