– புதுடில்லி நிருபர் –
கட்சியில் வாரிசுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், ஆந்திராவைச் சேர்ந்த மூன்று தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளனர்; பா.ஜ.,வில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வீழ்ச்சி
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருகிறது.வேறு சில மாநிலங்களில் உள்ளதுபோல், இங்கும் கட்சியில் வாரிசுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் வைத்ததுதான் சட்டம் என்ற அளவுக்கு, கட்சியில் அவரது தலையீடு மிக அதிகமாக உள்ளது.கட்சிக்கு லோக்சபாவில் கல்லா ஜெயதேவ் குண்டூர், கே. ராம் மோகன் நாயுடு, கேசினேனி ஸ்ரீனிவாஸ் என மூன்று பேரும், ராஜ்யசபாவில் கனகமேடல் ரவீந்திர குமார் எம்.பி.,யாக உள்ளனர்.இதில், இரண்டு லோக்சபா எம்.பி., மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.வரும், 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைவதற்கு இந்த மூவரும் திட்டமிட்டுள்ளனர்.சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் ஒருவரை, இந்த எம்.பி.,க்களில் ஒருவர் தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
விருப்பம்
இதற்கிடையே, பா.ஜ., தலைவர் நட்டாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவையும், மூவரும் பார்லிமென்டில் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பின், தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஆனால், பா.ஜ., தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. இந்த மூவரில் ஒருவருக்கு சமீபத்தில் அமலாக்கத் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement