ஆத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மனைவி சுதா (37). இவர், தனது ஆடுகளை சமத்துவபுரம் அருகில் உள்ள வரப்புகளில் மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுதா நின்றிருந்த சாலையோரத்தில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரின் அடிப்பகுதியில் சுதா சிக்கிக்கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள். சுதாவையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது குடும்பத்தாருடன் திருக்கோவிலூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது விபத்து நடைபெற்றதாக தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM