புதுடெல்லி: மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்டில் ஜேஎம்எம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான பாஜ.வின் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பித்து விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சியை கடந்த மாதம் கவிழ்த்த பாஜ, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் கூட்டணி அரசுக்கு அடுத்த குறியை வைத்துள்ளது. இந்த மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜேஎம்எம் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் காச்சப், நமன் விக்சல் கோங்கரி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காரில் மேற்கு வங்கத்துக்கு சென்றனர். ராணி ஹட்டி என்ற இடத்தில், இவர்களின் காரை போலீசார் தடுத்து சோதனை நடத்திய போது பல கோடி மதிப்புள்ள பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. இதையடுத்து, 3 எம்எல்ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர். இந்த பணம் யாருடையது? யார் கொடுத்தது? யாருக்கு கொடுக்க கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து மேற்கு வங்க போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே நேற்று கூறுகையில், ‘ஜார்க்கண்ட் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜ தனது ஆபரேஷன் தாமரை திட்டத்தை அரங்கேற்றி உள்ளத. இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசுகிறது. அந்த முயற்சியில் இந்த 3 எம்எல்ஏ.க்களும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.10 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜ பேரம் பேசியுள்ளது. கட்சி தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் 3 எம்எல்ஏ.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்டில் கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது,’ என்று கூறியுள்ளார்.