சட்டம் சரியாக செயல்பட்டால் நாங்கள் ஏன் தனியாக போராடப் போகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் மெத்தனமாக நடப்பதற்கு காரணம் எங்களுக்கு புரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஒரு அதிகாரி கூட இன்னும் எங்களை வந்து பார்க்கவில்லையே, ஏன்? – கள்ளக்குறிச்சி மாணவி தந்தை கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவினரை குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த மாணவியின் தாயார் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’ – கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாய் எழுப்பும் அடுக்கடுக்கான 5 சந்தேகங்கள்
இதைத் தொடர்ந்து பேசிய மாணவியின் தந்தையும் சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார். அந்த தகவல்கள் இதோ!
கேள்வி: மாணவியின் மரணம் தொடர்பாக உங்களுக்கு எப்போது தெரிய வந்தது?
தந்தையின் பதில்: நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை தொடர்பு கொண்ட எனது உறவினர் என் மகள் மாடியில் இருந்து விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், என்னை கம்பெனியிடம் சொல்லிவிட்டு உடனடியாக ஊருக்கு வருமாறும் தெரிவித்தார். நான் கொரோனா சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து கொண்டிருக்கும் போது அடுத்த அழைப்பு வந்தது. என் மகள் இறந்து விட்டதாகவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அங்கேயே ஓவென்று கதறி அழுதேன். என் முதலாளியின் உதவியால் இரவுதான் கள்ளக்குறிச்சி வந்தேன்.
காலைதான் மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். எங்கள் சார்பில் ஒரு மருத்துவரை அனுமதிக்க வைத்த கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது. இதையடுத்து சந்தேகம் எழுந்தால் மறுபிரேத பரிசோதனைக்கு வலியுறுத்துவோம் என்று நாங்கள் சொன்னோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். சிபிசிஐடிக்கு மாற்றவும் எங்கள் தரப்பு மருத்துவரையும் வைத்து மறுகூராய்வு செய்யவும் கோரிக்கை வைத்தோம்.
ஆனால் எங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் மறுகூராய்வு அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அது எங்களுக்கு வருத்தமே! எங்கள் தரப்பில் மகளின் மரணத்தை கொலையாகவே கருதுகிறேன். எங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. அதைக் களையவே எங்கள் தரப்பு மருத்துவரையும் வைத்து மறுகூராய்வு செய்ய வலியுறுத்தினோம். வீடியோப் பதிவுகளை பார்த்தால் அப்பரிசோதனை முழுமையடையுமா? அவசர அவசரமாக எங்கள் மகளது உடலை வாங்கச் சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். எங்களை அந்த நிலைக்கு தள்ளினார்கள். வழக்கு நடைபெறும் போதே இதைச் செய்தார்கள்.
கேள்வி: சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நீங்கள் மேலும் சட்டப்போராட்டத்தை தொடர்வீர்களா?
தந்தையின் பதில்: சட்டம் சரியாக செயல்பட்டால் நாங்கள் ஏன் தனியாக போராடப் போகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் மெத்தனமாக நடப்பதற்கு காரணம் எங்களுக்கு புரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஒரு அதிகாரி கூட இன்னும் எங்களை வந்து பார்க்கவில்லையே, ஏன்? குற்றவாளிக்கு ஏன் துணைபோகிறார்கள்? குற்றவாளியை விட்டுவிட்டு குற்றமில்லாதவர்களை பிடித்து தண்டனை தருகிறார்கள்.
கேள்வி: உங்கள் மகள் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார்?
தந்தையின் பதில்: எனக்கு ஒரே மகள். ஆசைஆசையாய் வளர்த்தேன். அவளுக்காகத் தான் என் வாழ்கையை விட்டுவிட்டு சிங்கப்பூரில் சென்று வேலை பார்த்தேன். அவளை டாக்டராக்க நினைத்தேன். அவள் ஐஐடியில் படிக்க விரும்புவதாக கூறினாள். எதுவென்றாலும் பரவாயில்லை, அவள் விருப்பப்படி படிக்க வைக்க முடிவு எடுத்திருந்தேன். இன்னும் ஒரு வருடத்தில் அடுத்த கட்டத்திற்கு எங்கள் மகள் சென்றிருப்பாள். எங்கள் வறுமையை போக்கியிருப்பாள். ஆனால் எங்கள் கனவு அழிந்துவிட்டது. அழித்தது அந்த பள்ளி நிர்வாகம்தான்.!
கேள்வி: இந்த வழக்கில் உங்களுக்கு ஆதரவு யார் தருகிறார்கள்?
தந்தையின் பதில்: அரசு எங்களுக்கு இப்போது ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அது பெரிதாக வருமா அல்லது உண்மை மூடி மறைப்பார்களா என்று பின்னர்தான் தெரிய வரும். ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். வன்முறையில் நாங்கள் ஈடுபடமாட்டோம். சட்டப் போராட்டத்தின் மூலம் உண்மையை வெளியே கொண்டு வருவோம்.
மாணவி தந்தை அளித்த முழு பேட்டி:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM