ஹோட்டல்கள், உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரிவு 18(2)(1)-ன் கீழ் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணத்தை சேர்க்கக் கூடாது.
ஹோட்டல்களில் நுகர்வோரிடம் சேவைக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. உணவுக் கட்டணத்துடன் சேர்த்து மொத்தத் தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதால் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இந்த வழிகாட்டுதல்களை மீறி, ஒரு ஹோட்டல் சேவைக் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் அறிந்தால் அவர் தன் பில் தொகையில் இருந்து சேவைக் கட்டணத்தை நீக்குமாறு சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம்.
மேலும் இது குறித்து 1915 என்ற தேசிய ஹெல்ப் லைனில் நுகர்வோர் புகார் அளிக்கலாம். உணவகங்கள் வழிகாட்டுதல் களை மீறும் பட்சத்தில் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்காக ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு முறையிலோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.