பழநி சன்னதி சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் செடியில் நேற்று 8 பூக்கள் பூத்தன.
பிரம்மகமலம் பூவின் சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் மட்டுமே பூக்கும். பழநி சன்னதி சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் கண்காணிப்பாளர் ராஜா. தனது வீட்டில் பல்வேறு மூலிகைச் செடிகள், காய்கறி செடிகள் வளர்த்து வருகிறார்.
இதில் பிரம்மகமலம் செடியும் வளர்க்கிறார். பிரம்மகமலம் பூவின் சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் மட்டுமே பூக்கும். விடிவதற்குள் பூ வாடி விடும். இவரது வீட்டில் வைத்துள்ள செடியில் 2021-ம் ஆண்டில் 3 பூக்கள் பூத்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 29) நள்ளிரவில் 8 பூக்கள் பூத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ராஜா கூறிய தாவது: பிரம்மகமலம் செடி, அதன் இலையை நட்டு வைத்தாலே வளரக் கூடிய தன்மை உடையது. இந்த பூ ‘இரவு ராணி’ (நைட் குயின்) என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில் வெண்மை நிறத்தில் பூ பூக்கும்.
நேற்று முன்தினம் (ஜூலை 29) நள்ளிரவில் 8 பூக்களும் முழுமையாக மலர்ந்திருந்தன. பூவை பார்த்து ரசிப்பதற்காகவே இரவில் கண் விழித்திருந்தோம். மைசூருவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு இலையை மட்டும் வாங்கி நட்டு வளர்த்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கத் தொடங்கியது என்று கூறினார்.