புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் தனியார் விமானங்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் செயல்படும் தனியார் விமான நிறுவனங்களின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 45 நாட்களில் அதிகமானது. இதையடுத்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனங்களுக்கு நேரில் சென்று அதிரடியாக சோதனை நடத்தியது. இதில், விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை தகுதியற்ற பொறியாளர்கள் அளித்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அனைத்து விமான நிறுவனங்களிலும் தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், டிஜிசிஏ இயக்குநர் அருண் குமார் நேற்று அளித்த பேட்டியில், “விமானத்தில் ஏற்படும் தொழில் நுட்பக்கோளாறுகள் இயல்பானவை. இதனால், மக்கள் பீதியடைய தேவையில்லை. கடந்த 16 நாட்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு விமானங்களிலும் இதுபோன்ற 15 தொழில் நுட்பக்கோளாறுகள் கண்டறியப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான பாகங்கள் உள்ள விமானத்தில் ஏற்படும் விரிசல், உயர் காற்றழுத்தம் உள்ளிட்ட சில கோளாறுகள், உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியவை அல்ல. இந்திய தனியார் விமானங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை,’ என்று கூறினார்.