புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 91-வது ‘மனதின்குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளோம். இதையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டுகிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதிவரை அனைவரும் சமூக ஊடக முகப்பு புகைப்படங்களில் (புரோபைல்) தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன்.
கனவு பாரதம்
தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தார். அவருக்கு தலைவணங்கி மரியாதை செய்கிறேன். இந்த நேரத்தில் மேடம் காமாவையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். தேசிய கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.
அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும்.
கரோனாவுக்கு எதிரான போராட்டம் இப்போதும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில், ஆயுஷ் அமைச்சகம் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறது. சர்வதேச அளவில் ஆயுர்வேதம், இந்திய நாட்டு மருந்துகள் மீதானஈர்ப்பு அதிகரித்து வருகிறது. அண்மையில் சர்வதேச ஆயுஷ் முதலீடு, கண்டுபிடிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.10,000 கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டது.
சென்னை செஸ் ஒலிம்பியாட்
சென்னையில் 44-வது செஸ்ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவுரவம் ஆகும். கடந்த ஜூலை28-ம் தேதி போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதே நாளில் இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்த இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபரில் நடைபெறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தமிழகத்தின் வாஞ்சிநாதன் அளித்த தண்டனை
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது. தமிழத்தை சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ள முடியும். சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில்தான் 25 வயது நிரம்பிய வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.