சென்னை: கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்ய அகாடமி விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 2021-ம்ஆண்டுக்கான சிறந்த தமிழ் சிறுவர் இலக்கிய நூலாக, கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை தேர்வு செய்து, கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா, கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள பாஷா பவன் அரங்கில் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. விழாவில் சாகித்யஅகாடமியின் துணைத் தலைவரும், எழுத்தாளருமான மாதவ் கவுசிக், விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.
விழாவில், கவிஞர் மு.முருகேஷ் குறித்த பாராட்டுக் குறிப்பும் வாசிக்கப்பட்டது. பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குடும்பத்தில் இருந்து வெளிவரும் ‘இந்துதமிழ் திசை’ நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராக பணியாற்றிவரும் கவிஞர் மு.முருகேஷ், தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர்.
பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் கூறும்போது, ‘‘தமிழில் தற்போது ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகம் தரும் வகையில், இந்த விருதைப் பெற்றுள்ளேன்.
இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகின்றனர். இலக்கியத்தின் புதிய தளிர்களாக சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறுவர் படைப்பாளிகளுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.