எத்தியோப்பியா பயணிக்கு சின்னம்மை; சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தகவல்| Dinamalar

பெங்களூரு : ”சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எத்தியோப்பியாவில் இருந்து வந்திருந்தவருக்கு ‘குரங்கு அம்மை’ பாதிப்பில்லை. ‘சின்னம்மை’ என்பது அறிக்கையில் வந்துள்ளது,” என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.கேரளாவில், ‘குரங்கு அம்மை’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட உடன், நாடு முழுதும் உஷார்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தவருக்கு, ‘குரங்கு அம்மை’க்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.அவரின் ரத்த மாதிரி, தோல்புண் மாதிரிகள், பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம், புனே வைரஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட எத்தியோப்பியா நபரின் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது.இது குறித்து, பெங்களூரில் நேற்று சுகாதார துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:இம்மாதம் தொடக்கத்தில் பெங்களூரு வந்த எத்தியோப்பியா நபருக்கு, குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இந்நோய் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில், அவருக்கு குரங்கு அம்மை இல்லை. சின்னம்மை நோய் என்பது உறுதியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பெங்களூரு அல்லது மங்களூரு சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணியருக்கும் காய்ச்சல், சளி, வியர்வை, தலைவலி, தசைவலி, சோர்வு, தொண்டை புண், இருமல் அல்லது தோல் வெடிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்படுவர். அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தனிமைப் படுத்தப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார துறையினர் கூறியதாவது:ஆப்பிரிக்காவை சேர்ந்தவர், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருவதால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். ஒரு கட்டத்தில் அவருக்கு சின்ன அம்மை நோய் பாதிக்கப்பட்டிருக்கலாம்.விமான நிலையங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகம், மருத்துவமனைகளின் நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.உடலின் உள் பாகங்களில் உள்ள வெடிப்புகளை பரிசோதிக்க முடியாது என்பதால், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோர், தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், 21 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.