“அரசு பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் ஜாங்கிட் திருச்சியில் பேட்டி
திருச்சி மாநகர காவல்துறையின் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் , யூத் , ஜீனியர், சீனியர் , மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
8 நாட்களாக நடைபெற்ற ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று (31.07.2022) பரிசுகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் S.R.ஜாங்கிட், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் சீத்தாராமராவ் ஆகியோர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 537 பேருக்கு பதக்கங்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜாங்கிட், “எனது கதையை வைத்து இயக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று படம் ஹிட் ஆனது. தொடர்ந்து நான் இரண்டு படங்களில் நடித்து உள்ளேன். அந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை” என்றார். பின்னர் போட்டி குறித்து பேசுகையில், “தற்போது இங்கு பொதுமக்களுக்கான போட்டி நடந்துள்ளது. காவலர்களுக்கான போட்டி தற்போது நடைபெறவில்லை. இருப்பினும் இந்த போட்டியில் மாநகர காவல் ஆணையர் முதற்கொண்டு சில போலீசார் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதேநேரம் பொதுமக்கள் போலீசாரை தாக்குவதாக புகார்கள் பல வருகிறது. போலீசாரை தனிநபர் தாக்க கூடாது. அப்படி தாக்கினால் அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ரார்.
பின்னர், “இந்த துப்பாக்கி சுடுதல் பயிற்சி மிகவும் நல்லது. இதில் தனி திறமை உள்ள மாணவர்கள் மேலும் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். அரசு பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முக்கிய பதவிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
கள்ளகுறிச்சி கலவரம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணியினர் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM