சண்டிகர்: நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அறைகளில் இருந்த அழுக்கு மெத்தையில் துணை வேந்தரை படுக்க வைத்த விவகாரத்தில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சரை நீக்க இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஜூரமஜ்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்காக படுக்கைகள் மிகவும் அழுக்காக இருந்ததை கண்டு கோபமடைந்த அவர், ‘ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கின்றன?’ துணை வேந்தர் ராஜ் பகதூரிடம் (71) கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலால் திருப்தி அடையாத மஜ்ரா, ‘இதுபோன்ற படுக்கையில் நீங்கள் படுப்பீர்களா?’ என்று கேட்டதோடு, அதில் பகதூரை படுக்கவும் வைத்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜ் பகதூர் மிகப்பெரிய மருத்துவர். பல ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து புகழ் பெற்றவர். இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்துள்ள அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன்னை உடனடியாக விடுவிக்கும்படியும் முதல்வர் பக்வந்த் மானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மாநிலம் முழுவதும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக துணை வேந்தருக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் களத்தில் குதித்துள்ளது. சுகாதார அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன் அவர் பொது மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று சங்கத்தின் பஞ்சாப் கிளை மாநில அரசை வலியுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்துவிட்டு தற்போது ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மருத்துவர் ஒருவரை அந்த பதவியில் முதல்வர் நியமிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் பரம்ஜித் சிங் மான் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.