கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள்தான்.
இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த குருவாயூர் பகுதியை சேர்ந்த அந்த 22 வயது இளைஞர் கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குரங்கு அம்மை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கேரள அரசு தெரிவித்தது. குரங்கு அம்மைக்கு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான். அவரிடமிருந்து எடுத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ‘வெளிநாட்டில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. சோர்வு மற்றும் மூளை அழற்சி காரணாமாகவே அவர் திருச்சூரில் சிகிச்சை பெற்று இருக்கிறார். குரங்கு அம்மை என்பது உயிர் பறிக்கும் நோய் கிடையாது. சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளோம். உயிரிழந்த இளைஞருக்கு தொடர்புடையவர்கள் விபரம், அவர் பயணித்த இடங்களில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.’ என்றார்.
இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 3, டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க: கடும் மன உளைச்சல்! 63 நாணயங்களை விழுங்கிய ராஜஸ்தான் வாலிபர்- மருத்துவர்கள் அதிர்ச்சிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM