காந்திநகர்: குஜராத்தில் தோல் கழலை எனப்படும் வைரஸ் நோய் தாக்கி 5 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 17 மாவட்டங்களில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தோல் கழலை எனப்படும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சூரத், ஆரவல்லி, ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் தாக்கி மாடுகள், ஆடுகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு முடுக்கி விட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு 10 கிராமங்களுக்கும் ஒரு கால்நடை மருத்துவ குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லத்தி தோல் நோய் எனப்படும் தோல் கழலை வைரஸ், பெரும்பாலும் கொசுக்கள், ஈக்கள், பேன்கள்,குழவிகள், பூச்சிகள் ஆகியவற்றால் மோசமான சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலம் உருவாகி விலங்குகளுக்கு பரவுவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே குஜராத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் சந்தைகள் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென நோய் தாக்குதல் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.