தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு அறிவுறுத்தி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டியில் 11 மி.மீ, திருப்புவனம் 10, குப்பணம்பட்டி, விளாத்திகுளம், பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”