இந்தியாவில் குரங்கம்மை நோய்: வாலிபர் உயிரிழப்பு

இந்திய மாநிலமான கேரளாவில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி துபாயிலிருந்து வந்த திருச்சூரை சேர்ந்த 22 வயதான வாலிபர் குரங்கம்மை அறிகுறிகளுடன் கடந்த 27ம் தேதி திருச்சூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. மேலும், குரங்கம்மை நோயின் இறப்பு வீதம் என்பது மிகவும் குறைவு. இதனால், இவருடைய மரணம் எப்படி நடந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவருடைய உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று தெரியும். இவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இறந்த வாலிபர் கேரளாவுக்கு புறப்படும் முன் துபாயில் உள்ள மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் குரங்கம்ம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை மறைத்து விட்டு கேரளா வந்துள்ளார். இந்த பரிசோதனையின் முடிவை நேற்றுதான் அதிகாரிகளிடம் உறவினர்கள் கொடுத்தனர் என்றும் தெரிவித்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.