மன்மோகன் மாதிரி இல்ல மோடி.. அடிச்சா அடிதான்: ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பேசுவது சமீபகாலங்களில் அதிக கவனம் பெற்றுவருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சனாதனம் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை சந்தித்து ஓய்ந்த நிலையில் தற்போது வன்முறைக்கு வன்முறையால் தான் தீர்வு காணமுடியும் என்று பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “துப்பாக்கி பயன்படுத்துபவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் சகிப்புத்தன்மை காட்டப்பட்ட கூடாது. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது” என்று கூறினார்.

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர். காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இனவாத குழுக்களின் மோதல்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் கடந்த 8 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளது.

நவம்பர் 26 மும்பை தீவிரவாத தாக்குதலை நம்மால் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர்.

அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்க முடியும். பாகிஸ்தான் நமக்கு நட்பு நாடா, எதிரி நாடா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாலாகோட்டில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. நீங்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் எதிர் தரப்புக்கு உணர்த்தியது. அப்படித்தானே ஒரு அரசு செயல்பட வேண்டும்” என பாஜக அரசின் செயல்பாட்டை பாராட்டி பேசியுள்ளார்.

மும்பை தாக்குதலை மன்மோகன் சிங் கையாண்ட விதத்தையும், புல்வாமா தாக்குதலை மோடி கையாண்ட விதத்தையும் ஒப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.