அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டதா? – ஓபிஎஸ்

சென்னை: “தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக எங்கெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்கள் மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், ஆலயந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை வழங்கி கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தன்னுடைய தன்னலமற்ற சேவையினால், அர்ப்பணிப்பு உணர்வினால், ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற குறிக்கோளை எய்தும் வண்ணம் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அளித்த ஜெயலலிதாவின் பெயரில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதோடு, பல்வேறு இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இந்த வரிசையில், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை – EVN சாலை – பெருந்துறை சாலை சந்திப்புகளை இணைக்கும் வண்ணம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, அந்தப் பாலத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப் பலகைகளும் அங்கு பொருத்தப்பட்டன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் மறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது, ஜெயலலிதா பெயரிலான மேற்படி பாலத்தின் பெயரும் மூடி மறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்தும், பெயர் மறைக்கப்பட்டுத் தான் இருக்கிறது. பொதுவாக, தேர்தல் முடிவடைந்ததும், இவ்வாறு மறைக்கப்பட்ட பெயர்களை சரிசெய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுப்பது வழக்கம்.

ஆனால், இந்த வழக்கமான நடைமுறை மேற்படி மேம்பால விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. ஒருவேளை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்ட மேம்பாலத்தின் பெயர் சரி செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் அனைவர் மனதிலும் மேலோங்கி நிற்கிறது.

மேற்படி மேம்பாலத்தில் ஜெயலலிதாவின் பெயர் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் உண்டு.

எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மேற்படி மேம்பாலத்தில் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பெயர்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.