பாகிஸ்தான் மக்கள் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமப்பட்டுவரும் நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருப்பதாவது, “பலுசிஸ்தானில் பெய்த கன மழையால் ஏழு அணைகள் உடைந்துள்ளது. இதனால் பல்வேறு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி கூறியாதாவது , “ஜூன் 1ஆம் தேதி முதல் பெய்த மழையால் 124 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 நாள்களுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 565 கிமீ சாலைகள் மற்றும் 197,930 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இதனால் மேலும் 712 கால்நடைகளும் இறந்துவிட்டது” என்றார்.