டெல்லி: இந்திய பொம்மை உற்பத்தி துறை எவரும் எதிர்பார்க்காத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், கொரோனா காலத்தில் சுமார் 2600 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டுமக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் பொம்மை ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளதாகவும், பொம்மை உற்பத்தித்துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறினார். முன்பு பொம்மைகள் ஏற்றுமதி 300, 400 கோடி ரூபாய் என்ற அளவே இருந்ததாகவும், கொரோனா காலத்தில் 2600 கோடி மதிப்பிலான பொம்மைகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய பொம்மைகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், இயற்கை சார்ந்தும் இருப்பதாக கூறினார். இளைஞர்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரே இந்தியாவின் இந்த சாதனைக்கு காரணம் என்று தெரிவித்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்திய பொம்மைகளை மட்டுமே வாங்கித்தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.