ஹவுரா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகிய மூன்று பேரும் , மேற்குவங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு காரில் சென்றனர். காரில் அதிகளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராணிஹாதி என்ற இடத்தில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.அப்போது ஜார்க்கண்ட் எம்எல்ஏ.,க்கள் வந்த வாகனத்தில் ரூ.48 லட்சம்பணம் இருந்தது. இவ்வளவு பணம்எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு, எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.
‘‘பழங்குடியினர் தினம் வரும் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தங்கள் தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சேலை வாங்குவதற்காக கொல்கத்தாவின் பாராபஜார் பகுதிக்கு செல்வதாகவும், அப்படியே மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் கடலோர பகுதியில் சுற்றுலா மேற்கொள்ள வந்ததாகவும்’’ எம்எல்ஏ.,க்கள் கூறினர். இந்த பதில்போலீஸாருக்கு திருப்தி அளிக்காததால் 3 எம்எல்ஏ.,க்கள் உட்பட காரில்இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மாநில போலீஸார், வருமான வரித்துறையினர் மற்றும் சிஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமானஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ‘‘ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள்3 பேரும் ஏதேனும் சட்டவிரோதநடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது நிருபனமானால், அவர்களை காங்கிரஸ் தலைமை தண்டிக்க வேண்டும். பாதுகாக்க கூடாது’’ என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த 3 எம்எல்ஏ.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட தாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி,ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்ற பாஜக. மேற்கொண்ட ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ நடவடிக்கை அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில்காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியும் கூட்டணியாக உள்ளன. எனவே, ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக. கொடுத்த பணம்தான் இது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக மறுப்பு
காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், ‘‘சொந்த தவறுகளை மறைக்க, மற்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதுகாங்கிரஸ் கட்சியின் வழக்கம். பணம் எங்கிருந்து வந்தது என்பதைகாங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விளக்க வேண்டும்’’ என்றார்.
எதிர்க்கட்சிகளின் சதி
எம்எல்ஏ., இர்பான் அன்சாரியின்சகோதரர் அளித்த பேட்டியில், ‘‘ சேலைகள் வாங்குவதற்காகத்தான் எம்எல்ஏ இர்பான் அன்சாரி வந்தார்.இந்த விஷயம் பெரிது படுத்தப் படுகிறது. ரூ.48 லட்சம் பணத்தை வைத்து, ஒரு மாநிலத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? என் சகோதரர் ஏழைகளுக்காக பணியாற்று கிறார். இது எதிர்க்கட்சிகளின் சதி செயல்’’ என கூறினார்.