பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், 7 அணைகள் உடைந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள், 32 பெண்கள் உட்பட 320 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பண மோசடி வழக்கு: நேரில் ஆஜராகும்படி பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பலுசிஸ்தான், சிந்து, கராச்சி, கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், விரைவில் நிவாரணம் அளிக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். மேலும், நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.