சீனாவைச் சேர்ந்த கப்பலுக்கு அனுமதி கொடுத்த இலங்கை அரசிடம், இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளது.
அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த யாங் வாங் – 5 என்ற உளவு கப்பல், அந்நாட்டில் இருந்து இலங்கை நாட்டில் உள்ள ஹம்மந்தோட்டா துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, வரும் 11 ஆம் தேதி ஹம்மந்தோட்டா துறைமுகத்திற்கு வரும் சீனக் கப்பல், 17 ஆம் தேதி வரை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு இருக்கும். இந்தக் கப்பல், செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதற்கும், ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது அந்தக் கப்பல் ஹம்மந்தோட்டா துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்புவதற்கான சீனக் கப்பல் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தகவலை, மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில், சீனக் கப்பலுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில், இலங்கை அரசிடம் தனது வருத்தத்தை மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும், ஹம்மந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போது, இந்தியாவை சீனக் கப்பல் உளவு பார்க்கக் கூடும் என்றும் இலங்கை அரசு அதிகாரிகளிடம், மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது. எனினும், சீனக் கப்பலுக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற இலங்கை அரசு மறுத்து விட்டது.