Jayakumar takes ADMK name board from OPS supporter: ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்பு இருந்த அ.தி.மு.க பெயர் பலகையை எடுத்து தனது இருக்கைக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வைத்ததை அடுத்து தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஒரே ஆண்டில் தி.மு.க-வுக்கு ரூ33.9 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?
தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒற்றைத் தலைமை பிரச்சனையால் அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சார்பாக ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன், காங்கிரஸ் சார்பாக தாமோதரன், நவாஸ், பா.ஜ.க சார்பாக கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம், அ.தி.மு.க. தரப்பில் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூட்ட அரங்கிற்கு வந்தார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர்.
அப்போது, கோவை செல்வராஜ் முன்பு இருந்த அ.தி.மு.க. பெயர் பலகையை எடுத்த ஜெயக்குமார், தங்கள் இருக்கை முன்பு வைத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை என்று கூறினார்.