பெங்களூரு : ”பா.ஜ., பிரமுகர் பிரவீன் கொலையில், பி.எப்.ஐ., அமைப்பின் கைவரிசை உள்ளது. கேரளா போன்று கொலை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை பொறுப்பை ஏற்றுள்ள, என்.ஐ.ஏ., அறிக்கை அளித்த பின், இந்த அமைப்பை தடை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்,” என மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.தட்சிண கன்னடா, சுள்ளியாவில்,
கொலை செய்யப்பட்ட பா.ஜ., பிரமுகர் பிரவீன் வீட்டுக்கு, மத்திய அமைச்சர் ஷோபா நேற்று சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, ‘பிரவீன் கொலைக்கு, நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்’ என, குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அமைச்சரும் உறுதி அளித்தார். தன் ஒரு மாத ஊதியத்துடன், 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் அவர் வழங்கினார்.பின், ஷோபா கூறியதாவது:
பிரவீன் இறப்பு, அனைவருக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கு பிரச்னை என்றாலும், அவர் உதவிக்கு செல்வார். அனைவருடனும் அன்பாக பழகியவர். பிரவீன் கொலை செய்யப்பட்ட போது, நான் டில்லியில் இருந்தேன். கொலை வழக்கு விசாரணையை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வுத் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.பிரவீன் கொலையில், பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கை வரிசை உள்ளது. கேரளா போன்று கொலை நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை தடை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement