‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘பீட்சா’ படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மி மேனன், கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அசால்ட் சேதுவாக நடிகர் பாபி சிம்ஹா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவும், சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை விவேக் ஹர்சஷனும் பெற்றிருந்தனர். பாபி சிம்ஹா கதாபாத்திரத்தை பார்த்து ரஜினி மிகவும் பாராட்டியிருந்தார். அதனாலேயே கார்த்திக் சுப்புராஜ், பின்னாளில் ரஜினியுடன் இணைந்து ‘பேட்ட’ படத்தை இயக்கும் வாய்ப்பும் அமைந்தது.
இந்நிலையில் ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, படப்பிடிப்புத் தள வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘ஜிகர்தண்டா 2’ உருவாக உள்ளதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார். தற்போது ‘ஜிகர்தண்டா 2’ படத்திற்கான கதை, திரைக்கதை எழுதிவருவதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். எனினும், படத் தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
And….. pic.twitter.com/pKL2Qi4oks
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022