ஆந்திராவை சேர்ந்த ஜே. ஹர்ஷிதா வர்ஷினி என்ற 17 வயது பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வியாழன் அன்று தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில் “உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; யாராவது கேட்டால் பொறியியல் வேளாண்மை மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் ரேங்க் பெறவில்லை என சொல்லிவிடுங்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பித் தருமாறு வீட்டிற்கு வந்த லோன் ஏஜென்டுகள் மிரட்டியதாக ஹர்ஷிதாவின் தாய் புகார் அளித்துள்ளார். அதில் “அவள் உயிரைப் பறித்துக் கொண்ட அந்த நாளில்தான் அவர்கள் இருவரும் வந்தார்கள்… என்னுடைய குழந்தைகளை நோக்கி எருமைகள்தான் மேய்க்க வேண்டும் என தேவையில்லாத வார்த்தைகளை உபயோகித்தார்கள்.. இது போன்ற இழிவான வார்த்தைகளை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எங்கள் குடும்பத்தின் கௌரவம் போனதாக மன வருத்தத்தில் இருந்தாள். அந்த அவமதிப்புக்குப் பின் அவள் சாப்பிடவில்லை. சிறிது நேரத்தில் இறந்துபோனாள். என்னுடைய வீட்டிற்கு வந்தவர்கள்தான் அவளது இறப்புக்கு காரணம்” என கூறி உள்ளார்.
போலீஸ் விசாரணையின்படி, ஹர்ஷிதாவின் குடும்பத்தார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுமார் 3,50,000 ரூபாய் லோன் வாங்கி உள்ளனர். அதை அவர்களால் திருப்பித்தர இயலவில்லை. மேலும் ஹர்ஷிதா எழுதிய தற்கொலை கடிதத்தில் அவர்களின் பொருளாதார இயலாமை தெளிவாக வெளிப்படுகிறது.
அந்தக் கடிதத்தில் குடும்பத்தை நடத்துவதே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால் என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன், உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; யாராவது கேட்டால் பொறியியல் வேளாண்மை மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் ரேங்க் பெறவில்லை என சொல்லிவிடுங்கள். தங்கையை நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேரச் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் அந்த லோன் ஏஜென்டுகள் மீது குடும்பத்தின் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.