புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால் மக்களவை செயல்பாடு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சீராகியுள்ளது.
அமளி, சஸ்பெண்ட் உத்தரவு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி ஒதுக்கீடு விவகாரம், அக்னி பாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான எம்.எம்.அப்துல்லா, கனிமொழி என்.வி.என்.சோமு, என்.ஆர். இளங்கோ, சண்முகம், கல்யாணசுந்தரம் மற்றும் கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களோடு திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, இடதுசாரிகள், ஆம்ஆத்மி ஆகிய கட்சி உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய நான்கு பேரையும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை இரு அவைகளும் தொடங்கியதிலிருந்தே அவ்வப்போது முடங்கின. இந்நிலையில், இரண்டு மணிக்கு அவை கூடியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
சிவசேனா எம்.பி. காட்டம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரு அவைகளும் தொடர்ச்சியாக முடங்கி வந்தன. இந்நிலையில் இன்று மக்களவையில் ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை அவை தொடங்கியவுடனேயே சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் அமலாக்கத் துறையினறால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நில ஊழல் வழக்கில் சஞ்சய் ரவுத் கைது செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார். மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி கைது நடவடிக்கைகளை ஏவிவிடுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.
இது ஒருபுறமிருக்க நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன் திரண்ட இடதுசாரி எம்.பி.க்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும். திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்த வேண்டும் என்றனர்.
இதற்கிடையில், அதே காந்தி சிலை முன் திரண்ட பாஜக எம்.பி.க்கள், மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழலுக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கிடையில், இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு குறித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி. விநாயக் ரவுத், காங்கிரஸ் எம்.பி., மனீஷ் திவாரி இதனை முன்வைத்துப் பேசவுள்ளனர். மாநிலங்களவையில் இவ்விவகாரம் நாளை விவாதிக்கப்படுகிறது.