தஞ்சை: தமிழகத்தில் தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு, மே மாதம் தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தப் பருவத்தில் நடவு செய்யப்படும் நெற்பயிர்கள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். அறுவடை நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது நெற்கதிர்கள் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள் பெரும்பாலும் பயிர்க் காப்பீடு செய்வது வழக்கம்.
இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 49 சதவீதமும், விவசாயிகள் 2 சதவீதமும் என அந்த ஆண்டுக்கான பயிர் சாகுபடிக்கான உற்பத்தி செலவினத் தொகையில் 5 சதவீதத்தை பிரீமியமாக செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-2022-ம் ஆண்டில் மத்திய அரசு பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான பங்களிப்பை 33 சதவீதம் மட்டுமே தர முடியும் எனக் கூறியது.
அப்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓரிரு மாதங்களே ஆனதாலும், கரோனாவால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதாலும், கடந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நிகழாண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், குறுவைக்குத் தேவையான சிறப்பு தொகுப்புத் திட்டமும் வழங்கப்பட்டது. ஆனால் பயிர்க் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
உறுதியளித்த அமைச்சர்கள்: இதனிடையே, கடந்த ஜூன் 7-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்களும், ஜூலை 3-ம் தேதி நடைபெற்ற குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரையும், நிகழாண்டு நிச்சயம் குறுவை பயிர்க் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தனர்.
இந்நிலையில், குறுவை நடவுப் பருவம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பயிர்க் காப்பீடு குறித்து எந்வித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.