TNPSC குரூப் 1 தேர்வில் 87% பெண்கள் வெற்றி: பிரமிக்க வைத்த மகளிர் சாதனை

TNPSC group 1 results 87% posts secured by girls: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் இறுதி பட்டியலில், தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள் என்பது இன்ப அதிர்ச்சி.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வுகளும், தொழில்நுட்பம் மற்றும் துறை சார்ந்த பிற பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: TNPSC Jobs; தமிழக அரசில் 1231 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

அரசு பணி கனவோடு இருக்கும் பலரும் இந்த தேர்வுகளுக்காக கடின பயிற்சி பெற்று தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் குரூப் 1 தேர்வு என்பது டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் உயர் பதவிகளுக்கான தேர்வாகும். குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பணியிங்கள் நிரப்பப்படும். இத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்வோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் பணிக்குப் பதவி உயர்வு பெறுவார்கள்.

இத்தகைய உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 66 பணியிடங்களில் 57 இடங்களில் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கிட்டத்தட்ட 87 % சதவீதமாகும். ஒரு போட்டித் தேர்வில் மகளிர் பெற்று இருக்கும் இந்த வெற்றி விகிதம் இந்திய அளவில் பிரமிக்கத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

அரசுப் பணிகளில் பெண்கள் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 30% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பெண்கள் இந்த இடஒதுக்கீட்டையும் தாண்டி, பொது பிரிவிலும் தேர்வாகி வருவது சிறப்பான செய்தி.

குரூப் 1 தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டின்படி மொத்தம் 66 பணியிடங்களில் 20 இடங்கள் பெண்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதம் உள்ள 46 பணியிடங்கள் பொதுப் போட்டியில் நிரப்பப்பட்டவை. இவற்றிலும் 37 இடங்களைக் கைப்பற்றி பெண்கள் பிரமிக்க வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிக அளவில் பெண்கள் கலந்துக் கொள்வதும், வெற்றி பெறுவதும் என்ற போக்கு நிலவி வருகிறது. இதில் உச்சபட்சமாக குரூப் 1 தேர்வில் 87% இடங்களில் பெண்கள் தேர்வாகி இருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை தான்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், போட்டித் தேர்வுகளிலும் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டில் பெண்களுக்கான முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், எத்தனையோ சிக்கல்களுக்கு இடையில் அதனை கெட்டியாக பிடித்து பெண்கள் முன்னேறி வருவது உண்மையிலே பாராட்டுக்குரியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.