இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் ஜிம்மில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மலேர்கோட்லா மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலராக பதிவு வகித்து வந்தவர் முகமது அக்பர்.
தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருவதை அக்பர் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தனது பயிற்சியாளருடன் சேர்ந்து அக்பர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அக்பரை சுட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவர், சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் துப்பாக்கி சத்தம் கேட்ட அங்கிருந்த நபர்கள் அக்பரிடம் ஓடி வந்தபோது, மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
Image: NewsroomReport
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொலிசார், கவுன்சிலர் முகமது அக்பரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள கண்காமிப்பு கமெரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து இருவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் உடற்பயிற்சி கூடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.