மும்பை,
சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத் சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
அவரது வீட்டுக்கு, நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில், ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அமலாக்க துறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் ராவத்திடம் நிலமோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.
பல மணி நேர விசாரணைக்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்தார். அங்கு சஞ்சய் ராவத்தின் தாயிடம் ஆசி பெற்றார். அதன்பின் அவரின் தாய், மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் உரையாடினார்.