சென்னை: படவட்டம்மன் கோவில் தெருவில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்ககளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், தொடர்ந்தும் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு எடுத்துகாட்டுதான் சென்னை மாநகராட்சியின் படவட்டம்மன் கோவில் தெரு பள்ளிக் கட்டிடம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளி ஒன்று கொருக்குப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது.
மேலும், அந்த 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, இந்தப் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கல்வி துறை துணை ஆணையர் சினேகாவிடம் கேட்டபோது, சீரமைக்க நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.