கீவ்,
உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.
இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக ஜீலை 22-ந் தேதி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷியா உறுதியளித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த ஜீலை 29-ந் தேதி தானிய ஏற்றுமதியை உக்ரைன் தொடங்கியது. ஒடேசா துறைமுகத்தில் துருக்கி நாட்டு கப்பலில் தானியங்கள் ஏற்றப்படுவதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், தானியங்கள் ஏற்றப்பட்ட பல கப்பல்கள் புறப்பட முடியாமல் துறைமுகத்தில் உள்ளதாகவும், அவை புறப்பட்ட பிறகு தானிய ஏற்றுமதி தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானியம் ஏற்றப்பட்ட சரக்கு கப்பல்கள் இன்று புறப்பட உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் கப்பலாக, ரசோனி சரக்கு கப்பல் 26,000 டன் தானியங்களுடன் லெபனானின் திரிபோலிக்கு புறப்பட உள்ளது.