இயக்குநர் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் `பொன்னி நதி’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் நவீன கவிதையுலகில் குறிப்பிடத்தக்க கவிஞர். இவர் எழுதும் முதல் திரைப்பாடல் இது. `காய சண்டிகை’, `வியனுலகு வதியும் பெருமலர்’ உள்ளிட்ட இவரின் கவிதை நூல்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. சங்கத் தமிழிலக்கியம் சார்ந்த இவரின் நுட்பம் காரணமாக இந்தப் படத்தில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது என்கின்றனர்.
ஆடிப் பெருக்கன்று வந்தியத் தேவன் தன் குதிரையிலேறி, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் தந்த முக்கியமான ஓலையை குந்தவை பிராட்டியிடமும் சுந்தரச் சோழரிடமும் தருவதற்காக கிளம்புகிறான். பொன்னி நதியைக் காணும் வேட்கை நெடுநாட்களாக கொண்டிருக்கும் வந்தியத்தேவன், சோழ வள நாட்டின் இயற்கை அழகை ரசித்தபடியே, தஞ்சாவூர் செல்லும் பயணம்தான் பொன்னியின் செல்வன் நாவலின் முதல் அத்தியாயம். `பொன்னி நதி‘ பாடல் இந்த முதல் அத்தியாயத்தை அடியொற்றி எழுதப்பட்டிருக்கிறது.
திரையிசைப் பயணத்தின் முதல் பாடலே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடிய ஹிட் பாடலாக அமைத்துவிட்டதால் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் நண்பர்கள், சக இலக்கியவாதிகள் வலைதளம் முழுதும் வாழ்த்து மழைப் பொழிந்தபடியிருக்கிறார்கள். இணையத்தில் வைரலாகியுள்ள இந்தப் பாடலைத் தொடர்ந்து மற்ற பாடல்களை செப்டம்பர் முதல் வாரம் நடைபெறவுள்ள ஆடியோ லாஞ்ச்சில் வெளியிடுவார்களாம். அந்தப் பாடல்களில் அழகான செந்தமிழ் சொற்களும் மரபான கவித்துவ அழகியல்களும் நிரம்பியிருக்கின்றனவாம். பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களிலும் சேர்த்து இவர் மொத்தம் 12 பாடல்கள் எழுதியிருக்கிறாராம்.