சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட யுவான் வாங்-5 என்ற உளவுக்கப்பல் தைவானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இந்த தகவல் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த கப்பலின் வருகை குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. அப்போது அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, இப்போது உளவுக்கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் தனது கவலையை தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. “சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட பயணத்தை இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்தியா அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்கும்.” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், இலங்கைக்கு உதவும் வகையில், ரூ.30,000 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கியுள்ளது. எரிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா செய்து வரும் உதவிகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளிப்படையாக, அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசியுள்ளார். இத்தனையும் மீறி சீனக் கப்பலை நிலை நிறுத்த அனுமதிக்கும் இலங்கையின் செயல் நன்றிமறப்பதாகவே பார்க்கப்படுகிறது.
ராஜதந்திரமும் அரசியலும் பிரதமர் மோடியின் பலங்கள் எனவும், வெளியுறவுக் கொள்கையில் பிரதமரின் அணுகுமுறை வியக்கத்தக்க வகையில் மாற்றம் கண்டிருக்கிறது எனவும் கட்டமைக்கப்படும் நிலையில், இலங்கையில் நிலவும் சிக்கலை ராஜதந்திர ரீதியாக கையாண்டு கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு இறங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், சீன உளவுக்கப்பலை இலங்கைக்குள் நுழைய விடும் அளவுக்கு வெளியுறவுக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளது மோடி அரசு.
சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரானது. அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. எனவே, சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆனால், இன்றைக்கு கப்பல் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து மத்திய பாஜக அரசு வெளியுறவுக் கொள்கையில் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதேபோல், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, பலரும் அமெரிக்காவை சாடினார்கள். ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட மிக மோசமான தோல்வி அது என்பதை வெகு சிலரே சுட்டிக்காட்டினர். அமெரிக்கா – சீனா என இரு துருவ அரசியல் உருவான போது, மத்திய மற்றும் தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் ஏற்ற இடமாக விளங்கியது. அதனை இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. இதே காலகட்டத்தில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து அமெரிக்காவுடன் அணி சேர்வது என முடிவெடுத்தது. ஆப்கனின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்ட பல மில்லியன் டாலர் கணக்கிலான முதலீடுகளை செய்தது இந்தியா. தற்போது ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளதால், இந்தியாவின் முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க – இந்திய ஆதரவு அரசு நீடிக்கும், அதன் மூலம் சீனாவுடன் போட்டியிடக்கூடிய அரசியல் நலன் திட்டங்களை நிறைவேற்றி விடலாம் என்ற முயற்சிகள் இந்தியாவிற்கு பலனளிக்காமல் போயுள்ளது. ஆப்கனில் இருந்து வெளியேறும் முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கியிருந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா இணைத்துக் கொள்ளப்படவேயில்லை. அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தலிபான்களுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. இது இந்திய வெளியுறவுக் கொள்கையில் பலவீனத்தை காட்டுகிறது.
இந்தியாவின் பலமான வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் வடிவமைக்கப்பட்டது. உக்ரைன் – ரஷ்யா விவகாரத்திலும் கூட நேரு வகுத்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பாராட்டப்பட்டது. ஆனால், தற்போதையை பாஜக அரசு பல்வேறு விவகாரங்களில் வெளியுறவுக் கொள்கையில் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
2014இல் இருந்து அருகில் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை என்பது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. முதல் ஆட்சிகாலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளியுறவுக் கொள்கைகளை மோடி கட்டமைத்தார். ஆனால் கடந்த ஒரு வருடத்தில், அவரது பயணங்கள் குறைந்துவிட்டன, இந்தியாவுக்குள் நடைபெற்ற சில விஷயங்கள் அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லியில் நடைபெற்ற கலவரங்களுக்கு வெளிநாடுகளின் கடும் விமர்சனம், தேசிய குடிமக்கள் பதிவேடு, இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்புணர்வு அதிகரிப்பதாகக் கூறி வளைகுடா நாடுகள் எதிர்ப்பு, அரசியல் சாசனத்தின் 370வது சட்டப் பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஆகியவை உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.