திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முத்து கொண்டாபுரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்துக்கு அருகே சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் கவரில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை இருப்பதைப் பார்த்திருக்கின்றனர்.
அதையடுத்து கனகம்மா சத்திரம் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த பிளாஸ்டிக் கவரை எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், பிறந்து சிலமணி நேரமான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தையை ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரித்து வரும் போலீஸார், அந்தப் பகுதியில் கர்ப்பமாக இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கும்பகோணம் அருகில் உள்ள வாண்டையார் இருப்பு பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் பிறந்து நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், அதே போன்று திருவள்ளூரில் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.