மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு…

மதுரை: மதுரையில் தமிழகஅரசால் கட்டப்பட்டு கலைஞர் நினைவு நூலக கட்டிடப்பணியின்போது 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுமான நிறுவனம் போதிய பாதுகாப்பின்மை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் நினைவை போற்றும் தமதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூலகம்  கட்டிடத்திற்காக கட்டுமானத்திற்கு 99 கோடியும், புத்தகங்கள் வாங்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கணிணி போன்ற உபகரணங்கள் வாங்க 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அடித்தளம் மற்றும் ஏழு மாடிகள் கொண்ட இந்த கட்டிட பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை துரிதபடுத்தப்பட்டு வேகமாக நடைபெற்று வந்தது. கடந்த 8 மாதங்களாக கட்டப்பட்டு வரும் நிலையில்,  விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.  இதனால் கட்டுமானத்தை குத்தகை எடுத்த நிறுவனம் பணியாளர்களைக்கொண்டு வேகமாக வேலை செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது  5வது தளத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்க  முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த இக்பால் (25) என்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனம் முறையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவில்லை என்ற சக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கலைஞர் நூலக பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.