முன்னறிவிப்பின்றி கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு; சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியல்!

காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்ற கொள்ளிடம் ஆறு திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பாய்ந்து சீர்காழி அருகே பழையாறு கடலில் கலக்கின்ற நதியாகும்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் எப்போதுமே தண்ணீர் ஆர்ப்பரிக்காது என்பதால் இந்த ஆற்றின் கரைகளில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து உலர்த்தி எடுத்து வருகின்றனர். இதுவே அவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்திருக்கின்றது.

திருச்சி மாநகரில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அடித்தட்டு மக்கள் வரை சலைவைக்கு கொடுக்கும் துணிமணிகள் கொள்ளிடம் ஆற்றில் தான் துவைத்து உலர்த்துவது வழக்கம். இந்த சூழலில், கடந்த சில தினங்களாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடந்த 1 வாரமாகவே காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் இருகரை தொட்டு தண்ணீர் பாய்ந்தோடியது. கொள்ளிடம் ஆற்றை நம்பி பிழைத்து வரும் சலவைத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து அவர்களும் தங்கள் சலவைத் தொழில் செய்வதை நிறுத்தியிருந்தனர்.

சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் தண்ணீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த புதன் கிழமை முதல் முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக சலவை செய்யாததால் துணிகள் தேக்கம் அதிகரித்ததையடுத்து வழக்கம்போல் நேற்று கொள்ளிடம் ஆற்றில் சலவைத் தொழிலாளர்கள் இரவு துணிகளை ஊரவைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலைக்கு மேல் முன்னறிவிப்பு இன்றி முக்கொம்பில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 100-க்கும் அதிகமான சலவைத் தொழிலாளர்கள் ஆற்றுக்குள் காய வைத்த பல்லாயிரம் மதிப்பிலான துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

பொதுவாக முக்கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு அது போன்ற முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட்டதால் சலைவைத் தொழிலாளர்கள் தாங்கள் பொதுமக்களிடம் இருந்து சலவைக்கு பெற்றத் துணிகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பொதுப்பணித்துறையினரின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து நூற்றுக்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் இன்று திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சலவைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கும் தங்களுக்கு இது போன்று முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட்டதால், சலவைத் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து சலவைக்கு வாங்கி வந்து ஊரவைத்த நிலையில் அனைத்தும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது.
இப்போது பொதுமக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது எனக்கோரியும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக முக்கொம்பில் முன்னறிவிப்பு இன்றி தண்ணீரை திறந்து விட காரணமாக இருந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (2)

இந்த சாலை மறியலால் திருவானைக்காவல் நெ.1 டோல்கேட் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து தற்காலிகமாக தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிட்டாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி சாலையின் ஓரத்தில் அமர்ந்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சலவைத்தொழிலாளி ஒருவர் தெரிவிக்கையில், நான் பொறந்தது முதல்லேர்ந்து இன்னைக்கு வர இந்த ஆத்துலதான் சலவைத் துணிகள ஊர வச்சுட்டு படுத்திருப்பேன், காலைல எழுந்து துவைத்து உலர்த்தி திருச்சிக்கு கொண்டு சென்று சேர்ப்பேன்.
வழக்கமா ஆத்துல தண்ணி வருதுன்னா எங்களுக்கு முன்னமே சொல்லிடுவாங்க, நாங்களும் கரை ஏறிடுவோம். எந்த பிரச்னையும் இருக்காது. கடந்த 1 வாரமா கொள்ளிடத்துல தண்ணீ போனதால துணிகள் எல்லாம் துவைக்காம அப்படியே பாதுகாப்பா வைச்சிருந்தோம்.

எப்பவுமே நாங்க இப்படித்தான் வச்சுருப்போம். கடந்த புதன் கிழமையிலேர்ந்து கொள்ளிடத்துல தண்ணி திறப்பத நிறுத்திட்டோம்ன்னு சொன்னதால நாங்க ஆத்துல இறங்கினோம், வழக்கம்போல துணிகளுக்கு வெள்ளாவி போட்டு வைச்சு காலைல துவச்சு உலர்த்தலாம்ன்னு இருந்தோம்.
ஆத்துல நள்ளிரவு 1 மணிக்கு மேல இருக்கும், தண்ணீர் வேகமா வந்துச்சு, கொஞ்ச நேரத்துலேயே நாங்க ஊறவைச்ச தொட்டி முழுவிடுச்சு, நாங்க தப்பிச்சா போதும்ன்னு மேல ஏறிட்டோம். இருட்டு நேரம்ங்கரதால யாரையும் துணைக்கு கூப்பிடவும் முடியாம, யாருக்குமே தெரியாம எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு.

இப்ப நாங்க சலவைக்கு வாங்கினவங்கட்ட என்ன பதில் சொல்றதுன்னே தெரியலைங்க என்றார் கண்ணீர் மல்க. அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதாகவும், அதனை சேமித்து விவசாய பணிகள் மேற்கொள்ள கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள கதவனை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் டெல்டா பகுதி விவசாயிகள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.