சென்னை: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் 217.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 82 சதவீதம் கூடுதலாகும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் அதி கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கும் விரைந்துள்ளன.
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும்,94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.