புதுடெல்லி: விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் பற்றி ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ராமூ கிராமத்தை சேர்ந்தவர் விஷால் துபே. இவரது 6 வயது மகள் கீர்த்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் பென்சிலை தொலைத்து விட்டு, வேறு பென்சில் கேட்டதற்காக கீர்த்தியை கண்டித்து அவரது தாய் அடித்தார். இதையடுத்து, விலைவாசி உயர்வினால் தான் தனக்கு பென்சில், ரப்பர் மறுக்கப்படுவதாக நினைத்த அந்த சிறுமி பிரதமர் மோடிக்கு இந்தி மொழியில் உருக்கமாக எழுதிய கடிதத்தில், ‘என்னுடைய பெயர் கீர்த்தி துபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, விலைவாசி உயர்வுக்கு நீங்கள் மிகப் பெரிய காரணமாக இருக்கிறீர்கள். பென்சில், ரப்பர் விலை கூட உயர்ந்து விட்டது. மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. பென்சில் கேட்டதற்காக என்னுடைய அம்மாவிடம் அடி வாங்கினேன். நான் என்ன செய்வது? என்னுடைய பென்சிலை சக மாணவர்கள் திருடி விடுகின்றனர்’’ என்று எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதைப் பற்றி சிறுமியின் தந்தை கூறுகையில், ‘இது என மகளின் மனதின் குரல்’ என கூறி உள்ளார்.