பாட்னா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’’ என்று தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக 750 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 250 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 512 மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது பிஹாரில் 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
வாரிசு அரசியலை எதிர்த்து பாஜக போரிட்டு வருகிறது. பாஜகவின் கொள்கைகள் வலுவானவை. இதன் காரணமாக மாற்று கட்சிகளிடம் இருந்து பாஜகவில் இணைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மக்களிடையே தேசப்பற்றை ஊட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அமைச்சர் அமித் ஷா பாஜகவினருக்கு அறிவுரை வழங்கினார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அப்போதே 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. பிரதமர் மோடி தலைமையில் மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கைப்பற்றி மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்.
பல்வேறு மாநிலங்களில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது கட்சியினருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தொண்டர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
பிஹாரை பொறுத்தவரை பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும். 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.