புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைவரிசை உரிமம் எடுத்துள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி துவங்கியது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்தது. இந்நிலையில், 7வது நாளான நேற்றுடன் ஏலம் நிறைவடைந்தது. இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டது. இது குறித்து ஒன்றிய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘5ஜி சேவைக்கான ஏலம் வெற்றிகரமாக முடிந்தது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்ச தொகையான ரூ.88,078 கோடிக்கும், பார்தி ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ரூ.18,784 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன. அதானி நிறுவனம் மிக குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு செப்டம்பரில் அகண்ட அலைவரிசை ஒதுக்கப்படும். வரும் அக்டோபரில் 5ஜி சேவை தொடங்கும்’’ என்றார்.